< Back
மாநில செய்திகள்
சிறை அலுவலரை தாக்கிய பெண் கைதிகள் மீது வழக்கு - 4 பேர் வெவ்வேறு சிறைக்கு மாற்றம்
சென்னை
மாநில செய்திகள்

சிறை அலுவலரை தாக்கிய பெண் கைதிகள் மீது வழக்கு - 4 பேர் வெவ்வேறு சிறைக்கு மாற்றம்

தினத்தந்தி
|
22 Feb 2023 10:58 AM IST

புழல் பெண்கள் சிறையில் 3 கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் சிறை அலுவலரை தாக்கிய பெண் கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் 4 பேர் வெவ்வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர்.

சென்னையை அடுத்த புழல் பெண்கள் சிைறயில் 200-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த வாரம் சிறை போலீசார் பெண்கள் சிறையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வினோதினி, தாரணி, கலா ஆகிய 3 பெண் கைதிகளிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் புழல் பெண்கள் சிறையில் அதிகாரிகள் அதிக கெடுபிடி காட்டுவதாக கூறி நேற்று சிறை துணை அலுவலர் வசந்தி என்பவரை பெண் கைதிகள் 9 பேர் ஒன்று சேர்ந்து தாக்கியதுடன், அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். மேலும் சிறையில் உள்ள டியூப் லைட்டுகள், ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர்.

இது குறித்து சிறை துணை அலுவலர் வசந்தி, புழல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் பெண் கைதிகளான வினோதினி, தாரணி, கலா, சத்யா, நாகஜோதி உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இது தொடர்பாக சிறை உயர் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையின்பேரில் ெபண் கைதிகளான தாரணி திருச்சி சிறைக்கும், வினோதினி வேலூர் சிறைக்கும், சத்யா கடலூர் சிறைக்கும், நாகஜோதி மதுரை சிறைக்கும் உடனடியாக மாற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் புழல் பெண்கள் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்