என்.எல்.சி.க்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு - இன்று பிற்பகல் விசாரணை
|என்.எல்.சி. விரிவாக்க பணி விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.
சென்னை,
என்.எல்.சி. விரிவாக்க பணி விவகாரம் தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட்டு இன்று மதியம் விசாரிக்கிறது. நெற்பயிர்களின் அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு தொல்லை தர கூடாது என முருகன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். முருகனின் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி பாமகவை சேர்ந்த வக்கீல் பாலு நீதிபதி முன் முறையிட்டார். அதன்படி வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வருகிறது.
கையகப்படுத்திய நிலத்தை 5 ஆண்டுகளாக பயன்படுத்தவில்லை என்பதால் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர் முருகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்கதை
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி, கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி வாய்க்கால் மற்றும் சாலை அமைக்கும் பணி கடந்த 26-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்கு பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் வளையமாதேவி பகுதியில் வாய்க்கால் வெட்டும் பணி மற்றும் சாலை அமைக்கும் பணியை என்.எல்.சி.நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.