< Back
மாநில செய்திகள்
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு: சுப்ரீம்கோர்ட்டு அதிரடி
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு: சுப்ரீம்கோர்ட்டு அதிரடி

தினத்தந்தி
|
8 Sept 2022 11:44 AM IST

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை (அ.தி.மு.க. ஆட்சியில்) போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்குகள் சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கிடையே இந்த மோசடியின் மூலமாக சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறையும் கடந்த 2021-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்த சம்மனை எதிர்த்து செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை கடந்த 1-ந் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த சூழலில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என தெரிவித்து அமைச்சர் செந்தில்பாலாஜி சார்பில் வக்கீல் ராம்சங்கர் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனிடையே மற்றொரு விவகாரத்தில் பொறியாளா் பிரிவில் பாதிக்கப்பட்ட போலீஸ் தரப்பு சாட்சியாக இருந்த தா்மராஜ் என்பவா் சாா்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மெக்கானிக்கல் பொறியாளரான தா்மராஜுக்கு உரிய தகுதியிருந்தும் சென்னை, மெட்ரோ போக்குவரத்து நிறுவனத்தில் வேலைகிடைக்காமல் போனதாகவும், தகுதியற்ற நபா்களுக்கு பணம் பெற்று பணி வழங்கப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, மனு மீது வேலை மோசடி பிரிவு காவல் ஆய்வாளா் மற்றும் சண்முகம் உள்ளிட்ட எதிா்மனுதாரா்கள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமா்வு உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, ஊழலுக்கு எதிரான இயக்கம் தரப்பில் தாக்கலான மனுவும் அந்த வழக்குடன் சோ்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், வி.ராம சுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரிக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் மின்துறை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கை முடித்து வைத்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை சுப்ரீம்கோர்ட்டு இன்று ரத்து செய்துள்ளது. மேலும், பணமோசடி வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த தீர்ப்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்