அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு: இன்று விசாரணை
|கவர்னரிடம் முறையான அனுமதி பெறாததால், முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை சிறப்பு கோர்ட்டு விடுவித்து உத்தரவிட்டது.
சென்னை,
தமிழ்நாட்டில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். தற்போது இவர் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் பாதுகாவலராக வேலை செய்த போலீஸ் அதிகாரி கணேசனுக்கு முறைகேடாக ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2012-ம் ஆண்டு அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து, ஐ.பெரியசாமியை விடுவித்து கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் எம்.பி., எம்.எல்.ஏ. க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணையை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் நேற்று தொடங்கினார்.
அப்போது, வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கிய பின்னர், ஐ.பெரியசாமி வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது ஏன்? என்பது உள்பட பல கேள்விகளை நீதிபதி கேட்டார்.
அதற்கு பதில் அளித்து அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரஞ்சித்குமார் கூறுகையில், "பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடர கவர்னரிடம்தான் போலீசார் ஒப்புதல் பெற்று இருக்க வேண்டும். அதற்கு பதில், சபாநாயகரிடம் ஒப்புதல் பெற்றுள்ளனர். இது சட்டப்படி தவறு. அதனால், சாட்சி விசாரணை தொடங்கிய பின்னர், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி ஐ.பெரியசாமி மனுத்தாக்கல் செய்தார்.மேலும், முன்னாள் அமைச்சருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய சபாநாயகர் அனுமதி வழங்க முடியாது. அனுமதி வழங்க அவருக்கு அதிகாரமே கிடையாது.
அதனால், முறையான அனுமதி இல்லாமல் தொடரப்பட்ட வழக்கை சிறப்பு கோர்ட்டு விசாரிக்க முடியாது. அப்படி விசாரிப்பது கோர்ட்டின் நேரத்தையும், பொதுமக்களின் பணத்தையும் வீணடிப்பதாகும்.
எனவே, சபாநாயகரின் ஒப்புதல் சட்டப்படி செல்லாது என்பதால் சிறப்பு கோர்ட்டு தன் மனதை முழுமையாக செலுத்தி, வழக்கில் இருந்து ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு சரியானது. அதில் எந்த தவறும் இல்லை" என்றார்.
இவரது வாதம் முடிவடைந்ததை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பின் வாதத்துக்காக இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.