< Back
மாநில செய்திகள்
பட்டாசு பதுக்கிய 9 பேர் மீது வழக்கு
விருதுநகர்
மாநில செய்திகள்

பட்டாசு பதுக்கிய 9 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
22 Oct 2023 1:20 AM IST

சாத்தூர், சிவகாசி பகுதிகளில் பட்டாசு பதுக்கிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் ஓ.மேட்டுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு ஆலையின் அருகில் தகரசெட் அமைத்து அதில் பேன்சிரக பட்டாசுகளை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கு இருந்த கணேஷ் குமார் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 4 பெட்டி பேன்சிரக பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சிவகாசி முருகன் காலனியில் வசித்து வரும் ஜெயக்குமார் (43) என்பவர் தனது வீட்டின் மாடியில் உரிய அனுமதியின்றி வெடிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சிவகாசி தாலுகாவில் உள்ள விஸ்வநத்தம் கிராம நிர்வாக அலுவலர் ரவிராஜன் அப்பகுதியில் திடீர் ஆய்வு செய்த போது ஐஸ்வர்யாநகரில் பட்டாசு கடை நடத்தி வரும் கந்தசாமி என்பவர் தனது கடைக்கு அருகில் உள்ள கட்டிடத்தில் அனுமதியின்றி ரூ.1 லட்சம் மதிப்புள்ள பட்டாசு பண்டல்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து கந்தசாமி மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிவகாசி தாலுகாவில் உள்ள நதிக்குடி கிராம நிர்வாக அலுவலர் சக்திகணேசன் அப்பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அந்த பட்டாசு ஆலையின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உற்பத்திக்கு தடை விதித்து இருந்த நிலையில் அங்கு அனுமதியின்றி பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து அதன் உரிமையாளர் செல்வராஜ் மீது மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், விருதுநகர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு பட்டாசு கடையில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு தகர செட்டில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் உரிமையாளர் ஜெயக்கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபகுதியில் மற்றொரு பட்டாசு கடையிலும் அனுமதியின்றி தகர செட்டில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த கடையின் நிர்வாகிகள் மாரியப்பன், வேல்முருகன் ஆகியோர் மீது திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கீழத்திருத்தங்கல் கிராம நிர்வாக அலுவலர் யோகராஜன் சிவகாசி-விருதுநகர் ரோட்டில் உள்ள ஒரு பட்டாசு கடையில் சோதனை செய்தார்.

அப்போது அங்கு தகர செட் அமைத்து அதில் 8 அட்டை பெட்டிகளில் பல்வேறு வகையான பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்ததுடன் சங்கரபாண்டியன், மாரி என்கிற மாரீஸ்வரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்