அரியலூர்
இரு தரப்பினர் இடையே மோதல்; 9 பேர் மீது வழக்கு
|இரு தரப்பினர் இடையே மோதல் சம்பந்தமாக 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கீழ சிந்தாமணி நடுத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 47). இவர் அவரது வீட்டில் அவரது அக்கா, தங்கைகளுடன் அவரது தந்தை உடல்நலம் குறித்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களது பக்கத்து வீட்டுக்காரரான அண்ணாசாமி, அவரது மகன்கள் அம்பிகாபதி அமல்ராஜ், அண்ணாசாமியின் மனைவி பார்வதி, அவரது மகள் அம்பிகா ஆகியோர் சீனிவாசன் வீட்டு முன்பு நின்று தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். இதனை ஏன் என்று கேட்ட சீனிவாசனை, அண்ணாசாமி உள்ளிட்ட அவரது தரப்பினர் அனைவரும் வீட்டின் முன்பு இருந்த கட்டையால் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தடுக்க வந்த சீனிவாசனின் தங்கை சுதாவையும் அடித்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சீனிவாசன் மற்றும் சுதா ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சீனிவாசன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாசாமி, அம்பிகாபதி, அமல்ராஜ், அம்பிகா, பார்வதி ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட மகன் அம்பிகாபதி, அண்ணாசாமியை கைது செய்தனர். இதே சம்பவத்தில் அண்ணாசாமி மற்றும் அவரது மனைவி பார்வதி ஆகியோர் தாக்கப்பட்டதாக அண்ணாசாமியின் மனைவி பார்வதி கொடுத்த புகாரின் பேரில் சீனிவாசன், அவரது தாய் மீனாட்சி, சுதா, சூரியமணல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.