கன்னியாகுமரி
இளநிலை ஆய்வாளர், உதவியாளர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு
|அம்மா சிமெண்டு விற்றதில் முறைகேட்டில் ஈடுபட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இளநிலை ஆய்வாளர், உதவியாளர்கள் உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
அம்மா சிமெண்டு விற்றதில் முறைகேட்டில் ஈடுபட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இளநிலை ஆய்வாளர், உதவியாளர்கள் உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மா சிமெண்டு
தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் நலனுக்காக அம்மா சிமெண்டு விற்பனை செய்யப்பட்டது. மற்ற சிமெண்டு மூடைகளை காட்டிலும் அம்மா சிமெண்டு மூடை விலை குறைவு. ஆனால் அது ஒரு நபருக்கு குறிப்பிட்ட அளவு தான் விற்பனை செய்யப்படும். அதாவது 100 சதுர அடி வீடு கட்டுவோருக்கு 50 மூடை அம்மா சிமெண்டு வழங்கப்பட்டது. இதே போல வீடு பழுது பார்க்கும் பணிக்கு 10 முதல் 100 மூடைகள் வரை அம்மா சிமெண்டு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நாகர்கோவில் கோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் சிமெண்டு விற்பனையில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது விண்ணப்பதாரர் அல்லாதவர்களுக்கு போலியான ஆவணங்கள் மூலம் அதிக விலைக்கு அம்மா சிமெண்டு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.
5 பேர் மீது வழக்கு
இந்த முறைகேடு 2016 முதல் 2017-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியின் போது நடந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கி இளநிலை தர ஆய்வாளர் ரவி, புகழேந்தி, இளநிலை உதவியாளர்கள் சதீஷ்குமார், செல்வராஜ் மற்றும் பில் கிளார்க் ஈஸ்வரகுமார் ஆகிய 5 பேர் மீது நாகர்கோவில் லஞ்ச போலீஸ் துணை சூப்பிரண்டு எக்டர் தர்மராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது இளநிலை தர ஆய்வாளர் புகழேந்தி 750 மூடைகளை வெளியாட்களுக்கு விற்பனை செய்துள்ளார். மூடை ஒன்றுக்கு ரூ.190-க்கு விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் சுமார் ரூ.1.50 லட்சம் ஆதாயம் கிடைத்துள்ளது. இதே போல இளநிலை தர ஆய்வாளர் ரவி 250 மூடைகளை விற்று ரூ.55 ஆயிரம் ஆதாயம் பெற்று இருக்கிறார். இளநிலை உதவியாளர் செல்வராஜ் 100 மூடைகளையும், இளநிலை உதவியாளர் சதீஷ்குமார் 250 மூடைகளையும், பில் கிளர்க் ஈஸ்வரகுமார் 100 மூடைகளையும் முறைகேடு செய்து விற்பனை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
நம்பிக்கை மீறல்
இவர்கள் மீது நம்பிக்கை மீறல் மற்றும் உண்மையான பயனாளிகளின் கையெழுத்தை போலியாக தயாரித்து அரசை ஏமாற்றுதல், ஆவணங்களை மோசடியாக பயன்படுத்தியது, அரசு நிதியை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.