< Back
மாநில செய்திகள்
போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
அரியலூர்
மாநில செய்திகள்

போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது

தினத்தந்தி
|
26 Oct 2023 11:33 PM IST

தா.பழூர் அருகே போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தலைமறைவு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தேவாமங்கலம் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் கண்ணாயிரம் மகன் ராமச்சந்திரன். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கலையரசன் என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில் தங்கள் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக கலையரசனின் மாமியார் சாந்தி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் அவரை தேடி வந்தனர். போலீசாரிடம் பிடிபடாமல் மறைந்திருந்த ராமச்சந்திரனை தேவாமங்கலத்தில் தேடி கண்டுபிடிப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வம், ராஜா, முதல் நிலைக்காவலர் முருகன் ஆகியோர் தேவாமங்கலம் கிராமத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராமச்சந்திரன் தேவாமங்கலத்தில் உள்ள அவரது அண்ணன் குமார் என்பவரது வீட்டில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

கொலை மிரட்டல்

இதையடுத்து குமார் வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கு மறைந்திருந்த ராமச்சந்திரனை வழக்கு தொடர்பாக கைது செய்ய வந்திருப்பதாக தெரிவித்தனர். ராமச்சந்திரனை, முருகனின் மோட்டார் சைக்கிளில் ஏறி வரும்படி கூறியபோது போலீசார் வாகனத்தில் ஏற மறுத்த ராமச்சந்திரன் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ராமச்சந்திரனின் மனைவி கயல்விழி, சகோதரர் கார்த்திக், உறவினர் ராகுல் உள்ளிட்ட சிலர் போலீசாருடன் ராமச்சந்திரனை அனுப்ப மறுத்ததோடு போலீசார் சென்ற மோட்டார் சைக்கிள்களின் சாவிகளை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

கைது

இதுகுறித்து முதல்நிலை காவலர் முருகன் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து 2 சம்பவங்களிலும் ராமச்சந்திரனை கைது செய்தார். பின்னர் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கார்த்திக், ராகுல், கயல்விழி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்ய சென்ற போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்