விருதுநகர்
பட்டாசு கடைக்காரர்கள் 24 பேர் மீது வழக்கு
|சிவகாசியில் விதிகளை மீறிய 24 பட்டாசு கடைக்காரா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிவகாசி அருகே ரெங்கபாளையத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் 13 அப்பாவி தொழிலாளர்கள் தீயில் சிக்கி கருகி பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் பட்டாசு ஆலைகள், கடைகளில் விதிமுறைகள் சரியான முறையில் கடைபிடிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய பல்வேறு துறை அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டது.
இந்த தாசில்தார் மாதா மற்றும் சிறப்புக்குழுவினர் நேற்று முன்தினம் சிவகாசி உட்கோட்டத்தில் சிவகாசி டவுன், கிழக்கு, திருத்தங்கல், மாரனேரி, எம்.புதுப்பட்டி ஆகிய போலீஸ் நிலைய அதிகாரிகள் தங்கள் பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். இதில் விதிமீறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ராஜரத்தினம், முகமது, சேகர், ஜான்சன், முருகன், செல்வபாண்டி, சேதுராஜ், கணேசன், தர்மர், சேர்மசங்கர், செண்பக விக்னேஷ், கணேஷ்பாபு, செல்வம், பரத், செல்வசெந்தாமரை, லட்சம், கவுதம், கார்த்திகேயன், பாலமுருகன், முத்துக்குமார், சுந்தர், காளியப்பன், செல்வதுரை, முத்துக்குமார் ஆகிய 24 பட்டாசு கடை உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பின்னர் அங்கிருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 20 நாட்கள் மட்டும் உள்ள நிலையில் சிறு வியாபாரிகளும், பொதுமக்களுக்கும் சிவகாசிக்கு நேரடியாக வந்து இங்குள்ள கடைகளில் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை மொத்தமாக குறைந்த விலைக்கு வாங்கி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு காரணமாக கடந்த 2 நாட்களாக பட்டாசு விற்பனை பெரும் அளவில் பாதித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவத்தால் பட்டாசு கடை உரிமையாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த வருட தீபாவளி விற்பனை பாதிக்கும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதனை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் அதே நேரத்தில் விதிகளை பின்பற்றி வரும் பட்டாசு வியாபாரிகள், அதிகாரிகளின் சோதனையில் எவ்விதத்திலும் பாதிக்க கூடாது. அதற்கு தேவையான நடவடிக்கையை மாவட்ட போலீஸ் நிர்வாகம் எடுக்க வேண்டும்.