விருதுநகர்
கிராம நிர்வாக அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது வழக்கு
|கிராம நிர்வாக அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் வில்லிபத்திரி கிராம நிர்வாக அதிகாரியாக இருந்து வருபவர் வள்ளி கிருஷ்ணவேணி. இவரும் வில்லிபத்திரி தலையாரி சிதம்பரமும் சின்னவள்ளிகுளம் கிராமத்தில் புது ஊருணி அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அளந்துவிட்டு பின்னர் நான்கு பகுதிகளிலும் கல் ஊன்றுவதற்காக சின்னவள்ளிக்குளம் நாடக மேடை அருகே கிராம நிர்வாக அதிகாரி வள்ளி கிருஷ்ணவேணியும், தலையாரி சிதம்பரமும் நடந்து சென்றனர். அப்போது அவர்களை சின்ன வள்ளி குளம் கிராமத்தை சேர்ந்த பன்னீர், லைசான்டர் ஆகியோர் வழிமறித்து கல் ஊன்ற கூடாது எனவும், இடம் சம்பந்தமாக நாங்கள் நீதிமன்றம் செல்கிறோம் என்றும் மீறி போனால் விஷம் குடிப்போம் என்று மிரட்டியுள்ளனர். அவர்களை வழிமறித்து அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாக வில்லிபத்திரி கிராம நிர்வாக அதிகாரி வள்ளி கிருஷ்ணவேணி மல்லாங்கிணறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பன்னீர், லைசான்டர் ஆகிய 2 பேர் மீதும் மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.