சேலம்
ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும் எனக்கூறிநிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்தவர் மீது வழக்குபணத்தை பறிகொடுத்தவர்கள் போலீசில் புகார் அளிக்கலாம்
|ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும் எனக்கூறி நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணத்தை பறிகொடுத்தவர்கள் போலீசில் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
சேலம்
சேலம் அம்மாப்பேட்டை கொய்யாதோப்பு தெருவை சேர்ந்தவர் சதாசிவம். இவர், மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நிதி நிறுவனம் தொடங்கி நடத்தி வந்தார். இவரது நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 4 மாதங்கள் முடிவில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் வழங்கப்படும். மேலும் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் 63 வாரத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள வீடும், ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மலேசியாவில் ஓட்டல் வியாபாரத்தில் முதலீடு செய்து மாதம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் பணமாகவோ அல்லது அதற்குண்டான மதிப்பில் தங்கமாகவோ வழங்கப்படும் என்று ஆசை வார்த்தைகளை கூறினார்.
இதனை நம்பி மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் பலர் தங்களது பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் குறிப்பிட்ட தவணை காலம் கடந்தும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பணம் அல்லது வீடுகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த மதுரை புதுவிலாங்குடியை சேர்ந்த முத்துசுப்ரமணியன், இதுபற்றி மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். ஆனால் அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலக முகவரி சேலம் என்பதால் இந்த வழக்கு சேலம் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில், நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த சதாசிவம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம் என்று போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.