திண்டுக்கல்
கொடைக்கானலில் விலை வீழ்ச்சியால் கால்நடைகளுக்கு உணவாகும் கேரட்
|கொடைக்கானலில் விலை வீழ்ச்சியால் கேரட்டுகள் கால்நடைகளுக்கு உணவாகி வருகின்றன.
கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் வெள்ளைப்பூண்டு, உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோஸ், முள்ளங்கி, காலிபிளவர் உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். புரட்டாசி மாதத்தில் ஏராளமானோர் அசைவ உணவுகளை தவிர்த்து, சைவ உணவுகளை சாப்பிடுவார்கள். சைவ உணவு வகைகளில் கேரட் முக்கிய இடம் பிடிக்கும். இதை கருத்தில் கொண்டு கொடைக்கானல் மலைக்கிராமங்களில் விவசாயிகள் 3 மாதங்களுக்கு முன்பு கேரட் பயிர்களை சாகுபடி செய்தனர். கேரட் நன்கு விளைந்து அமோக விளைச்சல் கண்டுள்ளது.
இதையடுத்து விவசாயிகள் கேரட்டுகளை அறுவடை செய்து, மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் மார்க்கெட்டுகளுக்கு கேரட் வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. மார்க்கெட்டுகளில் கேரட் ஒரு கிலோ ரூ.5 முதல் ரூ.8 வரையே விற்பனையாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சில விவசாயிகள் உரிய விலை கிடைக்காததால் கேரட்டுகளை பறிக்காமல் விட்டு விட்டனர். சிலர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு கேரட்டுகளை உணவாக வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து பூம்பாறை கிராமத்தை சேர்ந்த விவசாயி சந்தானம் கூறுகையில், அதிக லாபம் இல்லையென்றாலும் ஓரளவு விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கேரட் சாகுபடி செய்தோம். விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் கேரட் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் கேரட்டுகளை பறிக்காமல் விட்டுவிட்டோம். தற்போது அவை அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நிலத்திலேயே உழவு செய்வதுடன், கேரட்டுகளை மாடுகளுக்கு தீவனமாகவும் அளித்து வருகிறோம் என்றார்.