திண்டுக்கல்
கிணற்றில் குதித்து தச்சு தொழிலாளி தற்கொலை
|வத்தலக்குண்டுவில் கிணற்றில் குதித்து தச்சு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்த சுப்பிரமணி மகன் சுரேஷ் (வயது 35). இவருக்கு திருணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுரேஷ் திடீரென்று மாயமானார். பல்வேறு இடங்களிலும் தேடியும் அவர் கிடைக்காததால், தந்தை சுப்பிரமணி வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை தேடி வந்தனர். இந்தநிலையில் வத்தலக்குண்டு மஞ்சளாற்று பாலம் அருகே உள்ள கிணற்றில் ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கிணற்றில் மிதந்த நபரின் உடலை மீட்டனர். அப்போது அவர், சுரேஷ் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், சுரேஷ் குடும்ப பிரச்சினையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இருப்பினும் இதுதொடர்பாக போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.