கடலூர்
வேன் மீது சரக்கு வாகனம் மோதல்; 10 பேர் காயம்
|பண்ருட்டி அருகே வளைகாப்பு விழாவிற்கு சென்றுவிட்டு திரும்பிய போது வேன் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த புலியூர்காட்டுசாகை கிராமத்தை சேர்ந்தவர் அருள்ஜோதி மனைவி அஞ்சுகம்(வயது 42). இவரது உறவினர் வீட்டின் வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று முத்தாண்டிக்குப்பம் அருகில் உள்ள வரிசையாங்குப்பத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அஞ்சுகம் தனது உறவினர்களுடன் 9 பேருடன் ஒரு வேனில் சென்றார்.
பின்னர் விழா முடிந்ததும் அதே வேனில் அனைவரும் ஊருக்கு புறப்பட்டனர். காட்டுவேகாக்கொல்லை-குள்ளஞ்சாவடி சாலையில் வந்தபோது எதிரே வேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று வேனின் மீது மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது.
10 பேர் காயம்
இதில் வேனில் பயணம் செய்த அஞ்சுகம், பரமசிவம் மனைவி செல்வநாயகி(45), கோவிந்தராசு மனைவி கிருஷ்ணவேணி(50), பழனி மனைவி செல்வி(40), செந்தில் மனைவி ராணி(40), ஜெயக்குமார் மனைவி ராஜேஸ்வரி(32), அய்யாசாமி மனைவி சாந்தநாயகி(42), ராஜேந்திரன் மனைவி வசந்தகுமாரி(32), சக்கரவர்த்தி மனைவி ராணி, ஜெகநாதன் மகன் பொன்னன்(52) ஆகிய 10 பேர் காயமடைந்தனர்.
இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வேன் மீது சரக்கு வாகனம் மோதல்; 10 பேர் காயம்