திருச்சி
திருச்சியில் திருட்டுபோன சரக்கு வேன் திருவண்ணாமலையில் மீட்பு
|திருச்சியில் திருட்டுபோன சரக்கு வேன் திருவண்ணாமலையில் மீட்கப்பட்டது.
சரக்கு வேன் திருட்டு
திருச்சி பொன்மலை மாஜி ராணுவ காலனியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 54). இவர் சரக்கு வேன் ஓட்டி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது சரக்கு வேனை அரியமங்கலம் பழைய போலீஸ் நிலையம் அருகே நிறுத்திவிட்டு வீட்டுக்கு தூங்க சென்றார். பின்னர் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு மீண்டும் வேனை எடுக்க வந்தபோது, வேன் திருட்டு போயிருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்குமிங்கும் தேடிப்பார்த்தார். பின்னர் அதிகாலை 5.53 மணி அளவில் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-ஐ தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்தார்.
ஜி.பி.எஸ். கருவி
உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை போலீசார் ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மணிகண்டனிடம் விசாரித்தனர். அப்போது அவர், சரக்கு வேனில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு, அதை செல்போனில் இணைத்து இருப்பதாக கூறினார்.
மேலும், திருட்டு போன சரக்கு வேன் திருவண்ணாமலை மாவட்டம் சமுத்திரம் என்ற இடத்தில் இருப்பதாகவும், அந்த இடம் குறித்து ஜி.பி.எஸ். கருவி மூலம் தனது செல்போனில் காட்டுவதாகவும் கூறினார்.
ஒரு மணி நேரத்தில் மீட்பு
இதனால் உஷார் அடைந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு உடனடியாக திருவண்ணாமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து திருவண்ணாமலை போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கு நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு வேனை காலை 7.05 மணி அளவில் மீட்டனர். ஆனால் அந்த சரக்கு வேனை திருடிச்சென்று அங்கு நிறுத்தியது யார்? என்பது உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து மீட்கப்பட்ட வேனை திருச்சிக்கு கொண்டு வந்தனர். மேலும் சரக்கு வேனை திருடிச்சென்ற மர்ம நபர் யார்? என்று அரியமங்கலம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, அரியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே திருட்டு போன சரக்குவேனை புகார் வந்த சுமார் ஒரு மணி நேரத்திலேயே மீட்ட போலீசாரை கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார்.