காஞ்சிபுரம்
காஞ்சீபுரத்தில் சாமி ஊர்வலத்தில் கார் புகுந்து புகைப்பட கலைஞர் பலி; 8 பேர் படுகாயம்
|காஞ்சீபுரத்தில் சாமி ஊர்வலம் நடைபெற்றபோது கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் மோதியதில் புகைப்பட கலைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஊர்வலத்தில் புகுந்த கார்
காஞ்சீபுரம் சேக்குப்பேட்டை கவரை தெருவில் உள்ள ஜெய விநாயகர் கோவிலில் ஆடி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்களாக நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு மாட்டு வண்டியில் கரிக்கினில் அமர்ந்தவள் அலங்காரத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. ஊர்வலம் பாவாஜி தெரு வழியாக வந்துகொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாமி தரிசனம் செய்தவர்கள், வேடிக்கை பார்த்தவர்கள் மற்றும் பம்பை இசைத்தவர்கள் என 10 பேர் மீது அடுத்தடுத்து மோதியது.
புகைப்பட கலைஞர் பலி
இந்த விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அங்கு இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி புகைப்பட கலைஞர் வெங்கடேசன் (வயது 42) பரிதாபமாக இறந்தார். மதன்ராஜ், அக்பர் பாஷா, சுகுமார், ஞானப்பிரகாசம், தனுஷ், குரு பிரசாத், சரண், ஞானசேகர் ஆகியோர் பலத்த காயங்களுடன் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவிழா நின்றது
திருவிழாவின் போது கோர விபத்து ஏற்பட்டதால் திருவிழா பாதியில் நிறுத்தப்பட்டு சாமி கோவிலுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய காஞ்சீபுரம் பொய்யாக்குளம் பகுதியை சேர்ந்த சரவணன் (29) என்பவரை அங்கு இருந்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கி விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சிவகாஞ்சி போலீசார் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தும், அதன் டிரைவர் சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.