கார் பந்தயத்தால் காவல்துறைக்கு பணிச்சுமை: ஜெயக்குமார் விமர்சனம்
|கார் பந்தயத்தால் காவல்துறைக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. பணிச்சுமை காரணமாகவே கொளத்தூர் உதவி ஆணையர் சிவக்குமார் உயிரிழந்தார் என்று ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தி.மு.க. அரசை பொருத்தவரை ஒரு முதலாளித்துவ அரசு, கார்ப்பரேட் அரசு. ஏழை, எளிய மாணவர்களின் விளையாட்டுத் திறனை வெளிகொண்டு வரும் வகையில் அரசு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது வரவேற்கத்தக்கது.அதுபோன்ற எந்த ஒரு செயலையும் இவர்கள் செய்யாமல், இது ஒரு முதலாளித்துவ அரசு கோடீஸ்வரர், பெரும் பணக்காரர்களுக்காக நடத்தப்படுவது தான் பார்முலா-4 கார் பந்தயம். இந்தப் போட்டிகள் மூலம் வசூல் செய்யப்படும் பணம் யாருக்கு செல்கிறது?.
இன்னும் சில வாரங்களில் நாம் பருவமழையை எதிர்கொள்ள இருக்கிறோம். ஆனால், அதில் எல்லாம் கவனம் செலுத்தாமல் ஒட்டுமொத்த துறைகளும் கார் பந்தயத்தில் மட்டுமே குறிக்கோளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கார் பந்தயத்தால் காவல்துறைக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. பணிச்சுமை காரணமாகவே கொளத்தூர் உதவி ஆணையர் சிவக்குமார் உயிரிழந்தார். இது வருந்தத்தக்க விஷயம். இனியாவது இந்த அரசு திருந்துமா என்றால் திருந்தாது."இவ்வாறு கூறினார்.