< Back
மாநில செய்திகள்
கார்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்; மாணவர் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கார்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்; மாணவர் பலி

தினத்தந்தி
|
25 Feb 2023 1:57 PM IST

கார்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

திருவள்ளூர் ஈக்காடு மண்டபம் தெருவை சேர்ந்தவர் கிஷோர்குமார் (வயது 24). இவர் ஆந்திர மாநிலம் புத்தூர் அடுத்த பரமேஸ்வரமங்கலம் பகுதியில் உள்ள சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இதேபோல் பெரும்பாக்கம் பகுதியில் வசிக்கும் ஆகாஷ் (25) என்பவரும் திருப்பதியில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்து வந்தார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.

இந்த நிலையில் நேற்று காலை கிஷோர் குமார், ஆகாஷ் ஆகிய 2 பேரும் கல்லூரியில் ஹால் டிக்கெட் வாங்குவதற்காக திருவள்ளூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஆந்திர மாநிலத்திற்கு சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடி அருகே உள்ள ஏ.எம்.பேட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்த கார் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தலையில் படுகாயம் அடைந்த கிஷோர்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த ஆகாஷை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்தில் காரில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்