செங்கல்பட்டு
மதுராந்தகம் அருகே கார்-லாரி மோதி விபத்து
|மதுராந்தகம் அருகே கார்-லாரி மோதி விபத்து காரணமாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் சிதம்பரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். தனியார் நிறுவன அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம் தனது சொந்த ஊரில் இருந்து மனைவி, மகள், மகன் ஆகியோருடன் காரில் சென்னை நோக்கி பயணம் செய்தார். மதுராந்தகம் அருகே செல்லும்போது மதுராந்தகம் ஏரியில் இருந்து மண் ஏற்றி சென்ற டிப்பர் லாரியின் முன்பக்க சக்கரம் கழன்று சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரை தாண்டி மறு மார்க்கத்தில் சென்றது. இதில் அந்த லாரி முன்னால் சென்ற காரின் பின்னால் மோதியது. இதில் ராஜேஷ்குமார் அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்ததும் மதுராந்தகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜின்னா பாஷா அவர்களை பத்திரமாக மீட்டு வேறு காரில் அனுப்பி வைத்தார். லாரி கவிழ்ந்ததில், மண் சாலையில் கொட்டியது. போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் உடனே பொக்லைன் எந்திரம் மூலம் லாரியையும் மண்ணையும் அப்புறப்படுத்தினார். விபத்து காரணமாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.