< Back
மாநில செய்திகள்
கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு
சென்னை
மாநில செய்திகள்

கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு

தினத்தந்தி
|
19 Dec 2022 5:32 AM GMT

கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னையை அடுத்த அய்யப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 36). இவர், தனியார் நிதி நிறுவன வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், தன்னுடைய மனைவி திவ்யா (34), குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆகியோருடன் காரில் தேனாம்பேட்டையில் நடைபெற்ற ஒரு பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள சென்றார்.

காரை திவ்யா ஓட்டி வந்தார். பட்ரோட்டில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் கத்திப்பாரா மேம்பால சாலையில் வந்தார். கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து கார் இறங்கும் போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வருவதை கண்டதும் மேம்பாலத்தின் ஓரமாக காரை நிறுத்தினார். காரில் இருந்து அனைவரும் உடனடியாக கீழே இறங்கினர். அதற்குள் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. கார் முழுவதும் தீ மளமளவென பரவியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியில் போக்குவரத்தை தடை செய்தனர். அசோக் நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் காரின் முன்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால் கத்திப்பாரா பகுதியில் கிண்டி நோக்கி செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்