< Back
மாநில செய்திகள்
பெட்டி காளியம்மன் கோவில் தேரோட்டம்80 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

பெட்டி காளியம்மன் கோவில் தேரோட்டம்80 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது

தினத்தந்தி
|
2 Jun 2023 12:45 AM IST

கும்பகோணம் கொரநாட்டு கருப்பூர் பெட்டி காளியம்மன் கோவில் தேரோட்டம் 80 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

கும்பகோணம் கொரநாட்டு கருப்பூர் பெட்டி காளியம்மன் கோவில் தேரோட்டம் 80 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

பெட்டி காளியம்மன் கோவில்

கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் பகுதியில் பெட்டி காளியம்மன் கோவில் என அழைக்கப்படும் அபிராமி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 1943-ம் ஆண்டு வரை ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக நட்சத்திர நாளில் தேரோட்டம் நடந்து வந்தது.

அதன் பிறகு தேரின் பெரும்பாலான பகுதிகள் மிகவும் சிதிலம் அடைந்து, சக்கரங்கள் பழுதடைந்து தேரோட்டம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

80 ஆண்டுகளுக்கு பிறகு...

இந்த நிலையில் 80 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன், உபயதாரரின் ஏற்பாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தேர் கட்டுமான பணிகள் தொடங்கியது. தற்போது 24 டன் எடையில், 16 அடி உயரம், 14 அடி அகலம் மற்றும் 16 அடி நீளத்தில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டது.

மேலும் இந்த தேர் அலங்கரிக்கப்பட்ட நிலையில் 37 அடி உயரத்தில் காட்சியளிக்கும். இதனைத் தொடர்ந்து 80 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கோவிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தேரோட்டம்

அதன்படி அபிராமி அம்பிகை உடனாகிய சுந்தரேஸ்வர சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று உற்சவர் சாமி, அம்பாள் தேரில் எழுந்தருளினர். அதன் பிறகு தேரோட்டம் நடைபெற்றது.

இதில் இந்து சமய அறநிலைத்துறை கும்பகோணம் உதவி ஆணையர் சாந்தா, முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன், இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி, நிலவள வங்கி தலைவர் சோழபுரம் அறிவழகன், ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் அழகு.சின்னையன், செயல் அலுவலர் கணேஷ்குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

80 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவிலில் தேரோட்டம் நடந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்