தஞ்சாவூர்
திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோவில் தேரோட்டம்
|தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
சாரநாதப்பெருமாள் கோவில்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருச்சேறையில் சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் 108 வைணவ தலங்களில் 12-வது தலமாகும். இங்கு சாரநாதப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, நீலாதாட்சி, மார்பில் மகாலட்சுமி மற்றும் சாரநாயகி என பஞ்சலட்சுமிகளுடன் அருள்பாலிக்கிறார்.
ஒரு முறை காவிரித்தாய் கங்கைக்கு இணையான பெருமை தனக்கும் வேண்டும் என கேட்டு இத்தல சாரபுஷ்கரணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் பெருமாளை நோக்கி தவம் இருந்தார். அவருடைய தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார்.
தைப்பூச திருவிழா
பின்னர் கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக 5 லட்சுமிகளுடன் காட்சி தந்த பெருமாளிடம் காவிரி, 'எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும்' என வேண்ட பெருமாளும் அப்படியே செய்தார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருப்பதை இன்றும் காணலாம்.
10 நாட்கள் கொண்டாடப்படும் தைப்பூச திருவிழா இங்கு நடக்கும் திருவிழாக்களில் முக்கியமானதாகும். விழாவையொட்டி தேரோட்டம் நடக்கும். பெருமாள் 5 தேவியருடன் காவிரித்தாய்க்கு காட்சியளித்த நிகழ்வு நடந்தது தைப்பூச நாளில் என்பதால் தைப்பூச திருவிழா இக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
108 வைணவ தலங்களில் இங்கு மட்டுமே தைபூச திருவிழா 10 நாட்கள் கொடியேற்றத்துடன் நடப்பது சிறப்பம்சமாகும்.
தேரோட்டம்
இத்தகைய சிறப்புமிக்க இக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது. விழாவின் 9-ம் நாளான நேற்று பஞ்ச லட்சுமிகளுடன் சாரநாதப்பெருமாள் புதிய பட்டு வஸ்திரங்கள் நறுமண மலர் மாலைகள் சூடி தேருக்கு எழுந்தருளினார்.
அப்போது சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கோவி. செழியன், ராமலிங்கம் எம்.பி., கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணகுமார் ஆகியோர் தேங்காய் உடைத்து, தேர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 'சாரநாதா, சாரநாதா' என சரண கோஷம் எழுப்பி தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.