மதுரை
வாடிப்பட்டி அருகே கார் டிரைவர் வெட்டிக்கொலை
|வாடிப்பட்டி அருகே கார் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே கார் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாதயாத்திரை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை பழனியாண்டவர் கோவில் சாலையில் மலை அடிவாரத்தில் மினரல் வாட்டர் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக இயங்காமல் உள்ளது. இங்குள்ள தென்னந்தோப்பில் கத்தரிக்காய் ஊடுபயிராக பயிரிடப்பட்டு தோட்டப்பணிகள் நடந்து வருகிறது.
இங்கு சோழவந்தான் பூமேட்டு தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் சதீஸ் (வயது 30) பொறுப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சதீஷ் பழனி பாதயாத்திரை செல்ல முடிவு செய்தார். இதற்காக தனது அண்ணன் கார் டிரைவர் மருதுபாண்டி (40) என்பவரை தனக்கு பதிலாக நிறுவனத்தில் இருக்க சொல்லிவிட்டு புறப்பட்டார். மதுரையை சேர்ந்த 17 வயது சிறுவனும் தோட்ட வேலை பார்ப்பதற்காக அங்கு தங்கி இருந்தான்.
வெட்டிக்கொலை
இந்நிலையில் நேற்று பாதயாத்திரை செல்வதற்கு முன் தனது அண்ணனிடம் தகவல் சொல்லிவிட்டு போவதற்காக சதீஸ் நிறுவனத்துக்கு வந்தார். அப்போது மருதுபாண்டி முகம் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சதீஸ், வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதில் மருதுபாண்டி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், அந்த நிறுவனத்தில் இருந்த 17 வயது சிறுவனை காணவில்லை. எனவே, மருதுபாண்டியை கொலை செய்தது யார்? எதற்காக சிறுவன் தலைமறைவானான்? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரபரப்பு
இதற்கிடையே மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத், சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.