திருவண்ணாமலை
சிக்கன் கடையில் பணம் கொடுக்க மறுத்து தகராறு செய்த கார் டிரைவர் கைது
|தூசி அருகே சிக்கன் கடையில் பணம் கொடுக்க மறுத்து தகராறு செய்த கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தூசி
செய்யாறு தாலுகா தூசி அருகே கூழமந்தல் கிராமத்தில் கரீம் என்பவர் சிக்கன் கடை வைத்துள்ளார். இந்த கடையில் வேலூரை சேர்ந்த வசிம்அலி (வயது 22) என்பவர் கடந்த 2 மாதமாக வேலை செய்து வருகிறார்.
காஞ்சீபுரம் மாவட்டம் பெருநகர் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் மணிகண்டன் (29), கார் டிரைவர். இவர் இன்று காலை சிக்கன் கடைக்கு சென்று ஒரு கிலோ சிக்கன் கேட்டுள்ளார்.
அதற்கு வசிம்அலி பணம் கேட்டபோது மணிகண்டன், நான் ஒரு ரவுடி, என்னிடம் யாரும் பணம் கேட்க மாட்டார்கள். நீ மட்டும் பணம் கேட்கிறாய் என்று தகராறு செய்து, ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
மேலும் காரில் இருந்த தடியை கொண்டு வந்து வசிம் அலியை சரமாரியாக தாக்கினார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்ததும் மணிகண்டன் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து வசிம்அலி தூசி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.