சென்னை
மழைநீர் கால்வாய் பணியின்போது மரம் சரிந்து விழுந்ததில் கார் சேதம்
|மழைநீர் கால்வாய் பணியின்போது மரம் சரிந்து விழுந்ததில் கார் சேதம் அடைந்தது.
சென்னை கொளத்தூர், குமரன் நகர் 3-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கோகுலகிருஷ்ணன் (வயது 50). வக்கீலான இவர், தனக்கு சொந்தமான காரை வீட்டின் வாசலில் நிறுத்தி இருந்தார்.
அந்த தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரம் இருந்த மரத்தை ஒட்டி பள்ளம் தோண்டி கம்பிகள் கட்டி மழைநீர்கால்வாய் பணி மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காலை திடீரென அந்த மரம் சரிந்து விழுந்தது. மரத்தின் கிளை அங்கு நிறுத்தி இருந்த கோகுலகிருஷ்ணனின் கார் மீது விழுந்தது. இதில் கார் சேதம் அடைந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீஸ், தீயணைப்பு துறை மற்றும் சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் மண்டல அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். மரத்தை வெட்டி அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். நல்ல வேளையாக மரம் விழுந்தபோது யாரும் அந்த வழியாக செல்லாததால் உயிர் பலி தவிர்க்கப்பட்டது.