கடலூர்: சாலையோர தடுப்புசுவரில் கார் மோதி விபத்து; 2 வயது குழந்தை உள்பட 4 பேர் பலி
|கடலூரில் சாலையோர தடுப்புசுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளானது.
கடலூர்,
தேனி மாவட்டம் நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் அஜித் (வயது 27). இவர் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். அஜித் சென்னையில் இருந்து காரில் தனது மனைவி மதுமிதா (வயது 23), மகள் ஜனனியா பிரித்தி (வயது 2), மாமியார் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த தமிழ்செல்வி (வயது 47) ஆகியோருடன் ஆண்டிபட்டி சென்று கொண்டிருந்தார்.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது அது அஜித்தின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அந்த கார் சாலையோர தடுப்புசுவரில் பயங்கரமாக மோதியது. பின்னர் கார் உருண்டோடி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் படுகாயமடைந்த அஜித், அவரது மனைவி மதுமிதா, மகள் ஜனனியா பிரித்தி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய தமிழ்செல்வியை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.