கள்ளக்குறிச்சி
மரத்தில் கார் மோதல்; அய்யப்ப பக்தர் பலி
|உளுந்தூர்பேட்டை அருகே சபரிமலைக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பி வரும்போது மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் அய்யப்ப பக்தர் பரிதாபமாக இறந்தார்.
உளுந்தூர்பேட்டை
புதுச்சேரியில் இருந்து
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன்(வயது 62). இவர் சில நாட்களுக்கு முன்பு தனது உறவினர்கள் 3 பேருடன் காரில் சபரிமலைக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்து முடித்த பின்னர் மீண்டும் அவர்கள் அங்கிருந்து காாில் புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் வெங்கடேசன்(38) என்பவர் காரை ஓட்டினார்.
அந்த கார் நேற்று காலை உளுந்தூர்பேட்டையை அடுத்த ஆசனூர் சிட்கோ தொழில்பேட்டை அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் இறங்கி அங்கு நின்ற மரத்தின் மீது மோதியது.
அய்யப்ப பக்தர் பலி
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தியாகராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடன் வந்த ஜெயபாண்டியன், நாராயணன் மற்றும் அமுல்யா என்கிற சிறுமி ஆகிய 3 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த எடைக்கல் போலீசார் விபத்தில் காயம் அடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா். மேலும் பலியான தியாகராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோகம்
சபரி மலைக்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி வரும் வழியில் மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானத்தில் அய்யப்பபக்தர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.