பெரம்பலூர்
லாரி மீது கார் மோதல்; தந்தை-மகன் உள்பட 3 பேர் படுகாயம்
|லாரி மீது கார் மோதல்; தந்தை-மகன் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
மங்களமேடு:
லாரி மீது கார் மோதல்
ெசன்னை பொன்னேரியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(வயது 50). டிரைவர். இவர், அதே பகுதியை சேர்ந்த பாக்கியராஜ்(46), அவரது மகன் யாமஜி(9) ஆகியோருடன் ஒரு காரில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு, மீண்டும் சென்னைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை சுந்தர்ராஜ் ஓட்டினார்.
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே வந்தபோது, முன்னால் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகா மணலூர் பகுதியை சேர்ந்த டிரைவர் அருண்(25) ஓட்டி வந்த டிப்பர் லாரி மீது கார் மோதியது.
3 பேர் படுகாயம்
இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. மேலும் சுந்தர்ராஜ் உள்ளிட்ட 3 பேரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டயர் வெடித்தது
புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 41). டிரைவரான இவர் ஒரு சரக்கு வாகனத்தில் 80 ஆடுகளை ஏற்றி வந்தார். பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, அந்த சரக்கு வாகனத்தின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் சரக்கு வாகனம் சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வெங்கடேசன் காயமின்றி உயிர் தப்பினார். 80 ஆடுகளில் ஒரு ஆடு மட்டும் செத்தது. மேலும் இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த மங்களமேடு போலீசார், விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர்.