புதுக்கோட்டை
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; மின்வாரிய ஊழியர் பலி
|அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் பலியானார்.
மின் ஊழியர் பலி
புதுக்கோட்டை சிவபுரம் பகுதியை சேர்ந்தவர் வீரபாண்டிதுரை (வயது 45). இவர் செங்கப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய அலுவலராக பணியாற்றி வந்தார். இவர், சிவபுரத்தில் இருந்து தினமும் மோட்டார் சைக்கிளில் செங்கப்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு வந்து செல்வது வழக்கம். அதேேபால் நேற்று காலையில் வீரபாண்டிதுரை மோட்டார் சைக்கிளில் சிவபுரத்தில் இருந்து அலுவலகத்திற்கு சென்று விட்டு மீண்டும் பணி முடிந்து மாலை வீடு திரும்பி கொண்டிருந்தார்.
புதுக்கோட்டை-அன்னவாசல் சாலையில் எல்லைப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே வந்த போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக வீரபாண்டிதுரை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வீரபாண்டிதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீரப்பாண்டிதுரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரை ஓட்டி வந்த புதுக்கோட்டை கலிப் நகரை சேர்ந்த அமீர் என்பவரிடம் திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.