< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 வாலிபர்கள் பலி
விழுப்புரம்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 வாலிபர்கள் பலி

தினத்தந்தி
|
21 Aug 2023 12:46 AM IST

செஞ்சி அருகே நண்பரின் திருமணத்துக்கு சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.

செஞ்சி,

புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை சேர்ந்தவர் நடராசன். இவரது மகன் பாஸ்கர்(வயது 30). இவரும், வந்தவாசி அருகே உள்ள சாத்தாம்பூண்டியை சேர்ந்த துரைசாமி மகன் பிரகாஷ்(31) என்பவரும் நண்பர்கள். இவர்கள் 2 பேரும் சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தனர்.

இவர்களது நண்பரான விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஒருவரின் திருமணம் நேற்று காலை நடந்தது. இந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு பாஸ்கரும், பிரகாசும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து பாக்கத்துக்கு புறப்பட்டனர். செஞ்சி அருகே பெருங்காப்பூர் காப்புக்காடு அருகே வந்தபோது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்த கார் தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

2 பேர் பலி

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். மேலும் பாஸ்கர் மற்றும் காரில் வந்த செஞ்சி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த நவீன் (26), பீரங்கிமேட்டை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (27) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாஸ்கர் பரிதாபமாக இறந்தார். இதனிடையே நவீன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்