< Back
மாநில செய்திகள்
டேங்கர் லாரி மீது கார் மோதி 2 பேர் பலி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

டேங்கர் லாரி மீது கார் மோதி 2 பேர் பலி

தினத்தந்தி
|
11 Oct 2023 7:30 PM GMT

கிருஷ்ணகிரி அருகே டேங்கர் லாரி மீது கார் மோதி கேரள மாநிலத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் பலியானார்கள். நண்பர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

குருபரப்பள்ளி:-

கிருஷ்ணகிரி அருகே டேங்கர் லாரி மீது கார் மோதி கேரள மாநிலத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் பலியானார்கள். நண்பர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

லாரி மீது கார் மோதல்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் மண்ணடி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தீப் (வயது 26). இவரும், அவருடைய நண்பர்கள் அமான் (26), ரியாஸ் (24), மித்துஜிலால் (26), கிருஷ்ணன் சாந்த் (22) ஆகிய 5 பேரும் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.

இவர்கள் கேரளாவில் இருந்து காரில் பெங்களூரு நோக்கி நேற்று காலை வந்து கொண்டிருந்தனர். காலை 6.45 மணி அளவில் அவர்கள் கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி அருகே புலியரசி கிராமம் பக்கமாக சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற டேங்கர் லாரியின் பின்புறம் கார் பயங்கரமாக மோதியது.

2 பேர் பலி

இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த சந்தீப், அமான் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ரியாஸ், மித்துஜிலால், கிருஷ்ணன் சாந்த் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

லாரியின் மீது கார் மோதிய சத்தம் கேட்டும், காயம் அடைந்தவர்களின் அபய குரல் கேட்டும் அந்த பகுதியில் இருந்த மக்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் இது குறித்து கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கும், குருபரப்பள்ளி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

உடல்கள் மீட்பு

அதன்பேரில் குருபரப்பள்ளி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காருக்குள் சிக்கி கிடந்த ரியாஸ், மித்துஜிலால், கிருஷ்ணன் சாந்த் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பலியான சந்தீப், அமான் ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான லாரி, கார் ஆகியவற்றை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்