மாமல்லபுரம் அருகே ஷேர் ஆட்டோ மீது கார் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு
|மாமல்லபுரம் இ.சி.ஆர் சாலையில் ஷேர் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே தேவனேரி கிழக்கு கடற்கரை சாலையில் கோவளத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி ஷேர் ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தது.
அப்போது தேவனேரி பேருந்து நிறுத்தம் அருகில் பயணிகளை ஏற்றி செல்ல முயன்றபோது, புதுச்சேரி நோக்கி அதிவேகத்தில் சென்ற கார் ஒன்று ஆட்டோவின் பின்பக்கத்தில் அதிவேகத்தில் மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த நேபாளம் நாட்டை சேர்ந்த சாம்பலால்(வயது 48), வாயலூரை சேர்ந்த உண்ணாமலை (54) என்ற பெண் உட்பட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 2 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், விபத்து குறித்து அறிந்த மாமல்லபுரம் போலீசார் உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.