< Back
மாநில செய்திகள்
மின்கம்பத்தில் கார் மோதல்: மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் பலி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மின்கம்பத்தில் கார் மோதல்: மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் பலி

தினத்தந்தி
|
2 Sept 2023 12:24 AM IST

மின்கம்பத்தில் கார் மோதியதில் மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் உயிரிழந்தார்.

உதவி பேராசிரியர்

திண்டுக்கல் லட்சுமிசுந்தரம் காலனியை சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது. இதில் மூத்த மகன் ஸ்ரீதர் (வயது 34). இவர் புதுச்சேரி-கடலூர் சாலையில் பிள்ளையார் குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சமூக மருத்துவத்திற்கான துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இதையொட்டி அந்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள பணியாளர் குடியிருப்பில் அவர் தங்கியிருந்தார். ஸ்ரீதர் தனக்கு விடுமுறை கிடைக்கும்போது புதுச்சேரியில் இருந்து திண்டுக்கல்லுக்கு சென்று, தனது மனைவி மற்றும் பெற்றோரை பார்த்துவிட்டு வருவது வழக்கம்.

சாவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்த பின்னர், இரவில் திண்டுக்கல் செல்வதற்காக ஸ்ரீதர் தனது காரில் புறப்பட்டார். இரவு 10 மணியளவில் அவரது கார் பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் நான்கு ரோடு சந்திப்பில் உள்ள உயர்மட்ட பாலத்தின் வழியாக சென்று, மாவட்ட அரசு கண் மருத்துவமனை அருகே வந்தது. அப்போது ஸ்ரீதரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் படுகாயமடைந்த ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

போலீசார் விசாரணை

மேலும் ஸ்ரீதரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து பற்றி ஸ்ரீதரின் குடும்பத்திற்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ஸ்ரீதரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் பலியான டாக்டர் ஸ்ரீதரின் மனைவி பெயர் திவ்யா அலமேலு (வயது 32). இவரும் டாக்டராக உள்ளார். இந்த தம்பதியின் ஒரே மகள் ரியா. இந்த குழந்தைக்கு ஒரு வயதாகிறது.

மேலும் செய்திகள்