வடபழனியில் பைக் மீது கார் மோதி விபத்து - ஒருவர் படுகாயம்
|வடபழனி 100அடி சாலையில் பைக் மீது கார் மோதி விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
போரூர்,
சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் குமார். தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நள்ளிரவு 1 மணி அளவில் அசோக் பில்லரில் இருந்து வடபழனி நோக்கி 100அடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த கார் அவர் மீது பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் கிஷோர் குமார் பலத்த காயம் அடைந்தார்.
இந்த விபத்தை ஏற்படுத்திய கார் மோட்டார் சைக்கிளில் மோதியவுடன் சலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் படுகாயம் அடைந்த கிஷோர் குமாரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காரின் அடியில் சிக்கிய, மது போதையில் இருந்த நபரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரனையில் காரை ஓட்டி வந்தவர் பிரபு(வயது 37) என்பது தெரியவந்தது. இவர் ,சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.வடபழனி நட்சத்திர ஓட்டலில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக சென்றபோது இந்த விபத்து நடந்ததாக கூறினார். போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.