< Back
மாநில செய்திகள்
வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்
மாநில செய்திகள்

வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்

தினத்தந்தி
|
16 July 2023 3:05 PM IST

சரியான நேரத்தில் அனைவரும் காரில் இருந்து இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

திருப்பத்தூர்,

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இக்பால் அகமது, ஓசூரில் தனது மருமகளுக்குப் பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளார். அந்த காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் அந்த கார் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இக்பால் உடனடியாக காரை நிறுத்திவிட்டு தனது குடும்பத்தினர் அனைவரையும் காரில் இருந்து வெளியேற்றியுள்ளார்.

சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. சரியான நேரத்தில் அனைவரும் காரில் இருந்து இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்