< Back
மாநில செய்திகள்
கார் வெடிப்பு சம்பவம்: கோவையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
மாநில செய்திகள்

கார் வெடிப்பு சம்பவம்: கோவையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

தினத்தந்தி
|
26 Oct 2022 11:04 AM IST

காரில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை விரைந்தனர்

கோவை:

கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் வந்த கார் ஒன்று திடீரென்று வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் இருந்த ஒருவர் பலியானார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கோவை விரைந்து வந்தார். அவர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, இதுதொடர்பாக விசாரணை நடத்த 6 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார். 2 நாட்களாக அவர் கோவையிலேயே முகாமிட்டு விசாரணையை துரிதப்படுத்தினார். மேலும் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் இந்த சம்பவம் நடந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

கார் வெடித்து சிதறிய இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டபோது அந்த இடத்தில் ஆணிகள், இரும்பு குண்டுகள் (பால்ரஸ்) உள்ளிட்டவை கிடந்தன.

இதற்கிடையே காரில் உடல் கருகி இறந்து கிடந்தது கோட்டைமேடு எச்.எம்.பி.ஆர். தெருவை சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 29) என்பது தெரியவந்தது. என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் பழைய புத்தகங்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ஜமேஷா முபினின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்து பொட்டாசியம் குளோரைடு, அலுமினியம் நைட்ரேட், சல்பர் உள்ளிட்ட வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவரது வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஜமேஷா முபின் உள்பட 5 பேர் வெள்ளை நிறத்திலான ஒரு மூட்டையை தூக்கிக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வரும் காட்சி பதிவாகி இருந்தது.

அந்த மூட்டையில் அவர்கள் என்ன எடுத்து சென்றார்கள்? என்பதை கண்டறிய, ஜமேஷா முபின் உடன் இருந்தவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம். நகரை சேர்ந்த முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேரை நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைதான 5 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது ஜமேஷா முபின் வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற மர்ம பொருட்கள் என்ன? சதிச்செயலுக்கு பயன்படுத்த அந்த பொருளை எடுத்துச் சென்றார்களா? என்பன உள்பட பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு போலீசார் விசாரித்தனர்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகியோர் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டப்பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கைதான 5 பேரும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு என்.ஐ.ஏ. விசாரிக்க முகாந்திரம் உள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய புலனாய்வு முகமையின் டிஐஜி மற்றும் கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொள்ள கோவை சென்றுள்ளனர். இன்று பிற்பகலில் என்.ஐ.ஏ அதிகாரிகள் கள ஆய்வை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.காரில் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள், ஜமேசா முபினின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து காவல்துறையினரிடம், என்ஐஏ அதிகாரிகள் கேட்டறிந்து விசாரணை நடத்த உள்ளனர்.

என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினாலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை கோவை காவல்துறை வசம்தான் உள்ளது என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


உபா சட்டம் என்றால் என்ன..?

இந்திய இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் 1967 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் தான் உபா சட்டம். அதாவது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் ((Unlawful Activities (Prevention) Act (UAPA)). இந்தியாவில் பல சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் உபா சட்டம் கடுமையான வரைமுறைகளை கொண்டு உள்ளது என்கின்றனர் சட்டவல்லுனர்கள்.

எழுத்தின் மூலமாகவோ, பேச்சின் மூலமாகவோ, அல்லது வேறு வழிகளிலோ இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிராக யார் செயல்பட்டாலும் உபா சட்டத்தின் கீழ் வழக்கை காவல்துறை பதிவு செய்து வருகிறது.

உபா(UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவருக்கு சுலபமாக ஜாமின் கிடைக்க வாய்ப்பில்லை. நீதிமன்ற காவல் 30 நாட்கள் வழங்கப்படுவதோடு 180 நாட்கள் குற்றப்பத்திகை தாக்கல் செய்ய அவகாசமும் காவல்துறைக்கு கிடைப்பதாக உபா சட்டப்பிரிவு 43 சொல்கிறது.

மேலும் உபா சட்டத்தின் பிரிவு 35-ன் படி எந்த ஒரு இயக்கத்தையும் பயங்கரவாத இயக்கம் என்று அறிவிக்க முடியும் என்றும், அவ்வாறு அறிவித்தால், அந்த இயக்கத்தில் அதுவரை உறுப்பினர்களாக இருந்த அனைவரும், பயங்கரவாதிகளாகவே கருதப்படுவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அரசால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தாலோ, அந்த இயக்கத்தின் ஆவணங்களை வீட்டில் வைத்திருந்தாலோ கூட இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. 2004, 2008, 2012, 2019 ஆம் ஆண்டுகளில் உபா சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பபிடத்தக்கது.


மேலும் செய்திகள்