< Back
மாநில செய்திகள்
காட்சிப்பொருளான பேட்டரி கார்கள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

காட்சிப்பொருளான பேட்டரி கார்கள்

தினத்தந்தி
|
4 Dec 2022 10:04 PM IST

பக்தர்களை ஏற்றி செல்வதற்காக ராமேசுவரம் கோவிலுக்கு வழங்கப்பட்ட பேட்டரி கார்கள் காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

ராமேசுவரம்,

பக்தர்களை ஏற்றி செல்வதற்காக ராமேசுவரம் கோவிலுக்கு வழங்கப்பட்ட பேட்டரி கார்கள் காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

தடை

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் தினமும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

கோவில் ரத வீதிகளுக்குள் கார், வேன், ஆட்டோ பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்ல போலீசாரால் தடை விதிக்கப்பட்டுஉள்ளதால் வாகனங்கள் ஜே.ஜே.நகரில் உள்ள வாகன நிறுத்துமிடம் மற்றும் அக்னி தீர்த்த கடற்கரை சாலை வரையிலும் நிறுத்தி வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் குறிப்பாக காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளின் குடும்பத்தினர் வரும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம் போல் கோவில் ரதவீதி சாலைகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

இதையடுத்து அரசு அதிகாரிகளின் குடும்பத்தினர் வாகனங்களை மட்டும் போலீசார் அனுமதிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பேட்டரி கார்கள்

பக்தர்கள், வயதானவர்கள், பெண்கள் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் என ரதவீதி சாலையில் நடந்தே கஷ்டப்பட்டு செல்வதையும் இவ்வாறு கார்களில் வரும் அரசுத்துறை அதிகாரிகளின் குடும்பத்தினரும் அதிகாரிகளும் வேடிக்கை பார்த்து தான் செல்கின்றனர்.

ராமேசுவரம் கோவில் சார்பில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இலவசமாக பேட்டரி கார்களும் இயக்கப்பட்டு வந்தன. 3 பேட்டரி கார்கள் உள்ள கோவிலில் தற்போது ஒரு பேட்டரி கார் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. மற்ற 2 பேட்டரி கார்களும் இயக்கப்படாமல் அம்மன் சன்னதி மண்டபத்தில் பல மாதங்களாக வெறும் காட்சிப்பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இதற்கு சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கோரிக்கை

ஆனால் அதே நேரத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூலம் உண்டியல் வருமானத்தை அதிகரிப்பதில் மட்டும் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனவே ராமேசுவரம் கோவிலில் உடனடியாக கூடுதலாக பேட்டரி கார்களை வாங்கி ரதவீதி சாலையில் பக்தர்களின் வசதிக்காக இயக்க தமிழக இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்