< Back
மாநில செய்திகள்
கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால்  நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கார் ஜப்தி
நாமக்கல்
மாநில செய்திகள்

கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கார் ஜப்தி

தினத்தந்தி
|
27 Aug 2022 2:11 PM GMT

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால் கலெக்டர் அலுவலக பயன்பாட்டில் இருந்த கார் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.


ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால் கலெக்டர் அலுவலக பயன்பாட்டில் இருந்த கார் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிலம் கையகப்படுத்தப்பட்டது

நாமக்கல் அருகே உள்ள சின்ன முதலைப்பட்டியை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவருக்கு சொந்தமான 97 சென்ட் நிலம் வீசாணத்தில் இருந்தது. இந்த நிலம் கடந்த 1998-ம் ஆண்டு காலனி விரிவாக்க பணிக்காக கையகப்படுத்தப்பட்டது. இதற்காக ரூ.87 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்பட்டது. இந்த தொகை குறைவாக இருப்பதாக கூறி ரெங்கநாதனின் மகன் நிர்மல்குமார் (வயது 39), அவரது தாயார் சந்திரா (58), தங்கை வாசுகி (34) ஆகியோர் நாமக்கல் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு சதுரடிக்கு ரூ.12 வீதமும், ஆறுதல் தொகை 15 சதவீதமும், வட்டியுடன் வழங்க ஆதிதிராவிடர் நலத்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சுமார் ரூ.18 லட்சம் வழங்க வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த தொகையை வழங்காமல் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் இழுத்தடித்து வந்தனர்.

கார் ஜப்தி

இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் காரை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்படி நேற்று கோர்ட்டு அமீனா முன்னிலையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பயன்படுத்தி வந்த காரை ஜப்தி செய்ய முயன்றனர்.

அப்போது அரசு அதிகாரிகள், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அரசு டிரைவர் அங்கு இல்லாததால், தனியார் டிரைவரை பயன்படுத்தி திட்ட இயக்குனர் காரை ஜப்தி செய்து, கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தினர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்