சென்னை
கொல்ல முடியாது: சென்னையில் தெரு நாய்களை குறைக்க நடவடிக்கை - மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உறுதி
|சென்னையில் தெருநாய்களை கொல்ல முடியாது என்றும், அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் 135-வது வார்டு உறுப்பினர் (பா.ஜ.க.) உமா ஆனந்த் எழுந்து பேசினார். அப்போது தி.மு.க. உறுப்பினர் ஒருவர் எழுந்து வெளியில் சென்றார். அவரை பார்த்து ஏன் ஓடுகிறீர்கள்? என்று உமா ஆனந்த் கேட்டார்.
அதற்கு தி.மு.க. உறுப்பினர்கள், "தி.மு.க.வினர் ஓடமாட்டார்கள்" என்றனர். அதையடுத்து உமா ஆனந்த், ஆங்கிலத்தில் பேசினார். அப்போது மற்ற உறுப்பினர்கள், 'தமிழில் பேசுங்கள், பிரதமர் மோடியே தமிழில் பேசுகிறார்' என்று தெரிவித்தனர். 'நான் என்ன இந்தியிலா பேசினேன். ஆங்கிலத்தில் தானே பேசுகிறேன்' என்று அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து 'தெரு நாய்கள் அதிகமாக இருப்பதாகவும், வாகனங்களில் செல்லும்போது பலரை அவைகள் துரத்துவதாகவும்' அவர் தெரிவித்தார்.
அதற்கு மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, 'தெருநாய்களை குறைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதனை கொல்ல முடியாது. மாநகராட்சியில் 75 ஊழியர்கள், நாய்களை பிடித்து வருகின்றனர். அதற்கு மாநகராட்சியும், புளூகிராஸ் அமைப்பும் இனப்பெருக்க தடை சிகிச்சை செய்து வருகிறது. இந்த விஷயத்தில் மாநகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொள்கிறது.
இதேபோல், மாடுகளை வீட்டில் வளர்க்க சென்னையில் தடையில்லை. ஆனால் அதேநேரத்தில் சாலைகள், தெருக்களில் அதனை விடக்கூடாது. அவ்வாறு மேய்ச்சலுக்கு கொண்டு சென்றால், கயிறு மூலம் கட்டி உரிமையாளர் அழைத்து செல்லவேண்டும். அதனை மீறி சாலைகள், தெருக்கள், கடற்கரைகள், பூங்காக்களில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டில் மட்டும் 5 ஆயிரத்து 447 மாடுகள் அவ்வாறு பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது' என்றார்.
அப்போது உறுப்பினர் ஒருவர், மாடு வைத்திருப்பவர்களுக்காக தனியாக ஒரு இடம் ஒதுக்கலாமே? என்று கேட்டார். அதற்கு துணை மேயர் மகேஷ்குமார், 'அந்த கோரிக்கை ஏற்கனவே இருக்கிறது. அதற்கான இடம் எதிர்காலத்தில் உறுதிசெய்யப்படும்' என்றார்.
பூங்காவில் நூலகம் அமைக்கப்படுமா?
* மாநகராட்சி மன்றக்கூட்ட நேரமில்லா நேரத்தின்போது, உறுப்பினர் கண்ணன், 'பூங்காக்களை பொழுதுபோக்குக்காக மட்டும் பயன்படுத்தாமல் அங்கு சிறிய நூலகத்தை அமைத்தால், பொழுதுபோக்கோடு, அறிவுசார் விஷயங்களையும் உருவாக்கலாம்' என்ற ஆலோசனையை வழங்கினார். அதற்கு மேயர் பிரியா, 'பூங்காவில் நூலகத்துக்கு என்று தனியாக கட்டிடம் கட்ட முடியுமா? என்று முதலில் ஆய்வு செய்யலாம். அப்படியில்லை என்றால், சிறிய கூடாரத்தை அங்கு உருவாக்கி, தினசரி நாளிதழ்கள், அறிவுசார் புத்தகங்களை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம்' என்று பதிலளித்தார்.
* அதேபோல், மண்டலக்குழு தலைவர் ராஜன், 'மாநகராட்சி சார்ந்த நிதி, திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை நிலைக்குழு, மண்டலக்குழு தலைவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அதற்கான நகல்களை அனுப்பினால் நன்றாக இருக்கும்' என்று கூறினார். அதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, 'நகராட்சி நிர்வாகம் தொடர்பான அரசு உத்தரவுகள் அனைத்தும் உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அந்தவகையில் நிலைக்குழு, மண்டலக்குழு தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு 'வாட்ஸ்-அப்' வாயிலாக அந்த உத்தரவுகள் தெரிவிக்கப்படும். கவுன்சிலர்களுக்கு அவர்கள் பகுதிக்கான உத்தரவுகள் மட்டும் அனுப்பப்படும். அதை இந்த மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
நிர்பயா நிதியில் என்ன திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன?
* உறுப்பினர் உமா ஆனந்த், 'நிர்பயா நிதியை சரியாக பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பப்படுவதாக' நேரமில்லா நேரத்தில் பதிவு செய்தார். அதற்கு மண்டலக்குழு தலைவர் ரவிச்சந்திரன் "நிர்பயா நிதியை பயன்படுத்தவில்லை என்று சொல்கிறீர்கள், நீங்கள் சொன்ன எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆச்சு'' என்று கேள்வி எழுப்பினார். இதனால் மன்றக்கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
அதையடுத்து கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, 'நிர்பயா நிதியின் கீழ் பல்வேறு திட்டங்கள் மாநகராட்சியில் செய்யப்பட்டு இருக்கின்றன. அதில் சில குறிப்பிட்ட தகவல்களாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நிதியின் கீழ் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், பெருநகர சென்னை மாநகராட்சி மகளிர் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி பள்ளிகளில் மாணவிகள் கழிவறையில் சானிட்டரி நாப்கின்கள் விரைவில் அமைக்கப்பட இருக்கின்றன. இதுபோல் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்றார்.
* நிலைக்குழுத் தலைவர் சிற்றரசு, 'இ-சேவை மையத்தின் தேவை அதிகமாக இருக்கிறது. மின், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட வசதிகளை பெறுவதற்கு இ-சேவை அவசியமாக உள்ளது. எனவே சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு இ-சேவை மையத்தை உருவாக்கவேண்டும். அதுவும் வார்டு உறுப்பினர் அலுவலகத்துக்கு அருகில் அமைத்தால், நன்றாக இருக்கும்' என்று ஆலோசனை கூறினார்.