யானைகள் வழித்தடத்தில் உள்ள 19 லட்சம் மூங்கில் மரங்களை வெட்ட அனுமதிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு
|நீலகிரி, மசினக்குடியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள 19 லட்சம் மூங்கில் மரங்களை வெட்ட அனுமதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
சென்னை,
நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் தனக்கு சொந்தமான நிலத்தில் காய்ந்து போன மூங்கில் மரங்களை வெட்ட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் குருசந்த் வைத் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் காய்ந்து போன இந்த மூங்கில் மரங்களை வெட்டவில்லை என்றால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது என்பதால் தனியார் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த மூங்கில் மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்து உள்ளார்.
இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் அது யானைகள் வழித்தடமாக உள்ளதாகவும் 61 ஏக்கர் 85 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடத்தில் 19 லட்சம் மூங்கில் மரங்கள் உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய அரசு தரப்பு வக்கீல், மூங்கில் மரங்களை யானைகள் உணவாக பயன்படுத்தி வருவதாகவும் அந்த மரங்களை அப்புறப்படுத்தினால் யானைகள் ஊருக்குள் நுழைந்து மனித-விலங்கு மோதல் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில் நீதிபதி சரவணன், அந்த இடம் யானைகள் வழித்தடம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிற காரணத்தினால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள யானைகள் வழித்தடம் தொடர்பான குழுவிடம் தான் மனுதாரர் இது தொடர்பாக முறையிட வேண்டும் என்று கூறினார்.
மேலும் வனத்துறை சம்பந்தப்பட்ட மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து யானைகள் வழித்தடத்தில் இருக்கக்கூடிய இடங்களை கையகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் நிலம் அமைந்துள்ள இடம் யானைகள் வழித்தட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மூங்கில் மரங்களை வெட்ட அனுமதிக்க முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.