தேர்வு மையத்தின் கதவை உடைத்துவிட்டு தேர்வெழுத சென்ற தேர்வர்கள் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு
|காஞ்சிபுரத்தில் தேர்வு மையத்தின் கதவை உடைத்துவிட்டு தேர்வர்கள் தேர்வெழுத சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் மற்றும் சார்நிலைப் பணிகள் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு இன்று காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
காலை மாலை என இரு வேளைகளிலும் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் தேர்வு எழுத வந்திருந்தனர். 9 மணிக்கு தொடங்கி மதியம் வரை தேர்வு நடைபெற்ற நிலையில் 12 மணிக்கு மேல் உணவருந்துவதற்காக தேர்வர்கள் சென்றனர். அரைமணி நேரத்தில் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பகுதியில் உணவகங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் வெகு தொலைவில் இருக்கின்ற காஞ்சிபுரத்திற்கு சென்று உணவருந்தி விட்டு தேர்வர்கள் வந்தனர்.
இதனால் ஒரு மணிக்கு செல்ல வேண்டியவர்கள் அரைமணி நேரம் தாமதமாக சென்றுள்ளனர். அப்போது தேர்வு மையத்தின் வெளிக்கதவுகள் பூட்டப்பட்டது. பூட்டிய கதவுகளை திறந்து தாமதமாக வந்தவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று தேர்வர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தேர்வர்கள் அங்கிருந்த கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து, தேர்வு எழுத தங்களை அனுமதிக்க வேண்டுமென்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு தாமதமாக வந்த தேர்வர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.