திண்டுக்கல்
பழைய எண்ணெயில் தயாராகும் பலகாரங்களால் புற்றுநோய் அபாயம்
|பழைய எண்ணெயில் தயாராகும் பலகாரங்களால் புற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று உணபு பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உணவே மருந்தாக அமைந்தால், நோயற்ற வாழ்வு எனும் குறைவில்லாத செல்வம் ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தியம் ஆகிவிடும். அதை கருதியே நமது முன்னோர்கள் சத்துமிகுந்த உணவு பழக்கங்களை கடைபிடித்து வந்தனர்.
பொரித்த உணவுகள்
விரும்பும் உணவு எதுவாக இருந்தாலும் அதை வீட்டிலேயே தயாரித்து சாப்பிட்டனர். அது, உடலை கெடுக்காத உணவாக அமைந்தது. ஆனால் நாகரிக மாற்றத்தால் மனிதனின் பழக்க வழக்கங்கள் அனைத்தும் மாறிவிட்டன. அதில் உணவு வகைகளும் தப்பவில்லை. பண்டைய காலத்தில் தினமும் சாப்பிட்ட சத்தான உணவை என்றோ ஒருநாள் சாப்பிடும் காலமாக மாறிவிட்டது.
இதேபோல் என்றாவது ஒருநாள் பரவாயில்லை சாப்பிடுவோம் என்று கருதிய உணவை தினமும் சாப்பிட விரும்பும் மக்கள் அதிகரித்து விட்டனர். நமது முன்னோர்கள் கொழுப்புச்சத்து மிகுந்த எண்ணெய் உணவுகளை மிகவும் குறைந்த அளவே சாப்பிட்டனர். ஆனால் தற்போது முழுவதும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தேடி பிடித்து சாப்பிடும் பழக்கத்துக்கு பலர் மாறிவிட்டனர்.
பயன்படுத்திய எண்ணெய்
இதற்கு வசதியாக ஓட்டல்கள், சாலையோர உணவகங்களில் வடை, பஜ்ஜி, சிக்கன்-65 உள்பட விதவிதமாக எண்ணெயில் பொரித்த உணவுகளை விற்பனை செய்கின்றனர். அதிலும் சாலையோர உணவகங்களில் எண்ணெயில் பொரித்த உணவுகள் அதிகம் விற்கப்படுகின்றன. எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதால் கொழுப்புச்சத்து அதிகரித்து உடல்நலம் கெடும் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் சுவைக்கு அடிமையான நாவை அடக்க முடியாமல் எண்ணெயில் பொரித்த உணவை பலர் சாப்பிடுகின்றனர். அது ஒருபுறம் இருக்க, உணவுகளை பொரித்து எடுப்பதற்கு பயன்படுத்தும் எண்ணெயை கவனிக்க தவறினால் பெரும் ஆபத்தாகி விடும் வாய்ப்பு உள்ளது. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தி தயாரிக்கும் உணவுகளை சாப்பிடுவதால் குடல்புண் (அல்சர்), புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம் உள்ளது.
பஜ்ஜி, சிக்கன்-65
அதுபற்றிய விழிப்புணர்வு, ஒருசிலருக்கு இல்லை. எனவே சிக்கன நடவடிக்கையாக, ஒருமுறை பயன்படுத்திய பழைய எண்ணெயை கொண்டு சில உணவகங்களில் மீண்டும் உணவுகளை தயாரிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக வடை, பஜ்ஜி, சிக்கன்-65 ஆகியவை ஏற்கனவே பயன்படுத்திய பழைய எண்ணெயை கொண்டு மீண்டும் பொரித்து எடுப்பதாக கூறப்படுகிறது.
இதேபோல் பஜ்ஜி, சிக்கன்-65 சிவப்பு நிறமாக இருக்க வேண்டும் என்பதற்காக செயற்கை வண்ணம் சேர்க்கப்படுகிறது. அதுவும் குடல்புண், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மேலும் ஒருசில உணவகங்களில் வடை, பஜ்ஜி, சிக்கன்-65 ஆகியவற்றை தயாரித்து மூடி வைக்காமல் திறந்தவெளியில் வைத்து விற்கின்றனர்.
இதனால் வாகனங்கள் வெளியிடும் புகை, காற்றில் பறக்கும் தூசு ஆகியவை உணவு பொருட்கள் மீது படிகின்றன. உணவு பொருட்களுடன் சேர்த்து புகை, தூசியை சாப்பிடுவதால் உடல்நலமும் பாதிக்கிறது. எனவே உணவு பொருட்களை மூடி வைத்து விற்க வேண்டும்.
பழைய எண்ணெய் விற்பனை
எனவே ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய், செயற்கை வண்ணத்தை பயன்படுத்தக்கூடாது என்று உணவு பாதுகாப்பு துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். அதோடு நிற்காமல் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை விற்பனை செய்வதற்கு ஏற்பாடும் செய்து இருக்கின்றனர். ஒரு தனியார் நிறுவனம் திண்டுக்கல்லுக்கு நேரில் வந்து பழைய எண்ணெயை விலைக்கு வாங்கி செல்கிறது.
அந்த பழைய எண்ணெயை சுத்திகரித்து பயோ டீசலாக மாற்றி விற்பனை செய்கின்றனர். எனவே பழைய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தாமல் சேமித்து வைத்து விற்க வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிய எண்ணெயை பயன்படுத்த வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறையினர் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.
மேலும் உணவகங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர். எனினும் ஒருசிலர் தொடர்ந்து தவறு செய்கின்றனர். எனவே உணவகங்களில் நம்பி வந்து சாப்பிடும் மக்களுக்கு தரமான உணவை கொடுப்பதே சிறந்த சேவையாக இருக்கும். நோய் பாதிப்பு இல்லாத சமுதாயம் உருவாக பழைய எண்ணெயை பயன்படுத்துவதை உணவகங்கள் தவிர்க்க வேண்டும். அதை மீறும் நபர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
=====
புண்ணியம் நிறைந்த உணவு தொழில்
உணவு தானியத்தை விளைவிக்கும் விவசாயமும், உணவு வகைகள் விற்கும் தொழிலும் புண்ணியம் நிறைந்தவை. பசியாற வருவோருக்கு ருசியாகவும், தரமாகவும் உணவு வழங்குவது உணவகங்களின் கடமை ஆகும். உணவு தயாரிக்கும் முறையால் எந்தவித தீங்கும் வராமல் பார்த்து கொள்வதும் மற்றொரு முக்கிய கடமை.
நல்ல உணவு என்று நம்பி வருவோரின் உடலை பாதிக்காத முறையில் உணவு தயாரித்து வழங்குவதே தொழிலின் நேர்த்தி ஆகும். எனவே புற்றுநோயை உண்டாக்கும் வகையில் பழைய உணவுகளை மீண்டும் கொதிக்கும் எண்ணெயில் போட்டு கொடுப்பது, பழைய எண்ணெயை பயன்படுத்தி உணவு தயாரிப்பது, செயற்கை வண்ணம் சேர்த்தல் போன்ற தீய பழக்கத்தை கைவிடுவதும் சமுதாயத்துக்கு செய்யும் சேவை ஆகும்.
அதிகாரி எச்சரிக்கை
திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கலைவாணி கூறுகையில், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பஜ்ஜி, வடை, சிக்கன்-65 உள்ளிட்டவை உடல் நலத்துக்கு ஆபத்தானவை. அதேபோல் செயற்கை வண்ணங்களை சேர்த்து தயாரிக்கப்படும் பலகாரங்களும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அத்தகைய உணவுகளை சாப்பிடுவதால் மனித உடலில் உணவு பாதை கடுமையாக பாதிக்கப்படும். தொடக்கத்தில் குடல் புண் (அல்சர்) வரும், அதுவே ஆறாத புண்ணாக மாறி புற்றுநோயை ஏற்படுத்தும்.
எனவே ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு தயாரிக்கப்படும் உணவுகளை மக்கள் சாப்பிடக்கூடாது. அதேபோல் திறந்தநிலையில் வைத்து விற்கப்படும் பலகாரங்களை சாப்பிடுவதால், உடல் உபாதைகளுக்கு உள்ளாக நேரிடும். ஓட்டல், சாலையோர உணவகங்களிலும் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறோம். அதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்காக திண்டுக்கல், பழனி, கொடைக்கானலில் சாலையோர உணவக உரிமையாளர்களுக்கு பயிற்சி அளித்து இருக்கிறோம். மேலும் மாவட்டம் முழுவதும் ஓட்டல், உணவகங்களில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய், தனியார் நிறுவனம் மூலம் வாங்கப்படுகிறது. அதை சுத்திகரித்து பயோ டீசலாக மாற்றி விற்கின்றனர். எனவே மாவட்டம் முழுவதும் இருக்கும் ஓட்டல்கள், உணவகங்களும் அதை பின்பற்ற வேண்டும். சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் உணவுகளை மக்கள் வாங்கி சாப்பிட வேண்டும், என்றார்.
மாதந்தோறும் 7 ஆயிரம் லிட்டர் கொள்முதல்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஓட்டல்கள், சாலையோர உணவகங்களில் பயன்படுத்திய எண்ணெய், தனியார் நிறுவனம் மூலம் மாதந்தோறும் 2 முறை கொள்முதல் செய்யப்படுகிறது. மாதந்தோறும் 7 ஆயிரம் லிட்டர் வரை எண்ணெய் வாங்கப்படுகிறது. இந்த எண்ணெயை சுத்திகரித்து பயோ டீசலாக மாற்றி அந்த நிறுவனம் விற்பனை செய்கிறது. அதேநேரம் பழைய எண்ணெய் பயோ டீசலாக மாற்றப்படுவதை கண்காணித்து உறுதி செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.
பழைய எண்ணெயை எப்படி விற்பது?
ஓட்டல், சாலையோர உணவுகளில் ஒருமுறை பயன்படுத்தியதும் அந்த பழைய எண்ணெயை விற்பதற்கு சிரமப்பட வேண்டியது இல்லை. உணவக உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலரை தொடர்பு கொண்டால் போதும், பழைய எண்ணெயை வாங்கும் நிறுவனத்துடன் இணைத்து விடுவார்கள். அதன்பின்னர் தினமும் சேரும் பழைய எண்ணெயை ஒரு பாத்திரத்தில் சேமித்து வைக்க வேண்டும். மாதத்தில் இருமுறை குறிப்பிட்ட நிறுவனத்தினர் நேரில் வந்து விலை கொடுத்து எண்ணெயை வாங்கி கொள்வார்கள். பழைய எண்ணெயின் தன்மைக்கு ஏற்ப லிட்டருக்கு ரூ.35 முதல் ரூ.45 வரை வழங்கப்படுகிறது.