டிடிவி தினகரனை, திவாலானவர் என அறிவித்து அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீஸ் ரத்து
|டிடிவி தினகரனை, திவாலானவர் என அறிவித்து அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீசை சென்னை ஐகோர்ட்டு ரத்துசெய்தது.
சென்னை,
கடந்த 1995-96 காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து 62.61 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலமாக பெற்றதாகவும், பின்னர் அந்த தொகையை இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாகவும் அமமுக பொதுச் செயலாளரான முன்னாள் எம்பி டிடிவி.தினகரன் மீது அமலாக்கத்துறையினர், அன்னியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் எனும் ஃபெரா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் விதிக்கப்பட்ட ரூ.28 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தாததால் திவாலானவர் என அறிவித்து அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த அபராதத்தை செலுத்தாததால் டிடிவி.தினகரனை திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக அமலாக்கத் துறை பிறப்பித்த நோட்டீசை எதிர்த்து தினகரன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, தினகரனை அவமானப்படுத்தும் நோக்கிலேயே நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறி, அதனை ரத்து செய்து கடந்த 2003ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் 2005ல் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு ஐகோர்ட்டில் பல கட்டங்களாக நடைபெற்றது.
இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, திவாலானவர் என அறிவித்து அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீஸ் செல்லாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.