அரசு கல்வி தொலைக்காட்சி சி.இ.ஓ நியமனம் ரத்து?
|அரசு கல்வி தொலைக்காட்சி சி.இ.ஓ மணிகண்ட பூபதி பணி நியமனத்தை முழுமையாக ரத்து செய்து விட்டதாக கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதாக வீட்டிலிருந்தபடியே கல்வி கற்க பள்ளிக்கல்வித்துறை சார்பில், கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளி மாணவர்கள் வீடுகளிலேயே முடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டபோது அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றலுக்குக் கல்வி தொலைக்காட்சிதான் பெரியளவில் உதவியது.
அதன் காரணமாகவே தி.மு.க ஆட்சி அமைந்த பின்னரும் கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக நான்கு ஆண்டுகளாக முதன்மைச் செயலாளர் இல்லாமல் இயங்கிவந்த கல்வி தொலைக்காட்சிக்கு அந்தப் பதவி உருவாக்கப்பட்டு, மணிகண்ட பூபதி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்ட மணிகண்ட பூபதிக்கு மாதம் 1.5 லட்சம் ஊதியம். இரண்டு ஆண்டுகளுக்கு அவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அரசு கல்வி தொலைக்காட்சிக்கு சி.இ.ஓ நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தில் மணிகண்ட பூபதி பணி நியமனத்தை முழுமையாக ரத்து செய்து விட்டதாகவும் மீண்டும் விண்ணப்பங்களை பெற்று தகுதி வாய்ந்த ஒருவர் நியமனம் செய்யப்படுவார் என்றும் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.