< Back
மாநில செய்திகள்
உக்ரைன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடரமுடியுமா? - வைகோ கேள்வி
மாநில செய்திகள்

உக்ரைன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடரமுடியுமா? - வைகோ கேள்வி

தினத்தந்தி
|
8 Aug 2022 1:03 PM IST

உக்ரைன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடரமுடியுமா என்ற வைகோ கேள்விக்கு மத்திய இணை மந்திரி பதில் அளித்துள்ளார்.

சென்னை,

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் சேர்க்கைக்காக எம்.பி.க்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டதா? போர் காரணமாக உக்ரைனில் இருந்து வந்த மருத்துவ மாணவர்களுக்கு பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் மறுசேர்க்கை வழங்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் அதன் விவரங்கள் என்ன? என்று மாநிலங்களவையில் வைகோ கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி பாரதி பிரவின் பவார் கூறியதாவது:-

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன. வெளிநாட்டு மருத்துவக்கல்லூரிகளில் இருந்து இந்திய மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவ மாணவர்களை இடமாற்றம் செய்வதற்கான விதிமுறைகள் எதுவும் இல்லை. மருத்துவ மாணவர்களை இடமாற்றம் செய்ய இந்திய மருத்துவ ஆணையத்தால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஆவணங்களை சுமூகமான முறையில் வழங்குவதற்காக கிவ் நகரில் உள்ள இந்திய தூதரகம், உக்ரைனில் உள்ள சம்பந்தப்பட்ட அனைத்து பல்கலைக்கழகங்களுடன் தொடர்புகொண்டுள்ளது. இதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அவற்றை தீர்ப்பதற்கும், மாணவர்களுக்கு உதவுவதற்கும் தூதரகத்தின் இணையதளத்தில் அனைத்து விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்