< Back
மாநில செய்திகள்
வெண்ணாற்றை ஆக்கிரமித்த காடுகள் அகற்றப்படுமா?
திருவாரூர்
மாநில செய்திகள்

வெண்ணாற்றை ஆக்கிரமித்த காடுகள் அகற்றப்படுமா?

தினத்தந்தி
|
19 Jun 2023 12:15 AM IST

கூத்தாநல்லூர் அருகே வெண்ணாற்றை ஆக்கிரமித்த காடுகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெண்ணாறு

கூத்தாநல்லூர் அருகே உள்ள மணக்கரை கிராமத்தையொட்டிய இடத்தில் வெண்ணாறு செல்கிறது. இந்த வெண்ணாற்றில் இருந்து வரும் தண்ணீரை அந்த பகுதியில் உள்ள வயல்களுக்கு கொண்டு செல்வதற்காக 5 பாசன வாய்க்கால்கள் உள்ளன. இந்த பாசன வாய்க்கால் மூலம் கொண்டு செல்லக்கூடிய ஆற்று தண்ணீரை கொண்டு மணக்கரை, சேந்தங்குடி, செருவாமணி, புத்தகரம், பாலக்குறிச்சி மற்றும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சுமார் 200 ஏக்கர் வயல்களில் நெல், உளுந்து, பயறு, பருத்தி சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர்.

ஆக்கிரமித்த காடுகள்

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மணக்கரை கிராமத்தையொட்டிய இடத்தில் செல்லக்கூடிய வெண்ணாற்றில் அடர்ந்த காடுகள் ஆற்றையே ஆக்கிரமிப்பு செய்த நிலையில் காணப்படுகிறது. இதில் ஆற்றின் நடுவில் கருவேல மரங்கள் மற்றும் புதர் செடிகள் ஆற்றையே சூழ்ந்து இருப்பதால் ஆறு இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு காட்சி அளிக்கிறது. பரந்து விரிந்த வெண்ணாறு குறுகிய குட்டை போலவும் காணப்படுகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக வெண்ணாற்றில் வரும் தண்ணீர், கடைமடை பகுதி வரை முழுமையாக சென்றடைவதில் சிரமம் ஏற்படுகிறது.

காடுகளை அகற்றி தூர்வார வேண்டும்

பாசன வாய்க்கால் மூலம் முறையான அளவில் தண்ணீர் செல்வதிலும் தடை ஏற்படுகின்றன. இதனால் விவசாய பணிகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக அந்த பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட இடத்திற்கு தண்ணீர் வந்து சேருவதற்கு 10 நாட்கள் ஆகும். எனவே விரைவாக நடவடிக்கை எடுத்து ஆற்றில் ஆக்கிரமிப்பு செய்து உள்ள அடர்ந்த காடுகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்