திருவாரூர்
சேதமடைந்த படித்துறை சீரமைக்கப்படுமா?
|சேதமடைந்த படித்துறை சீரமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த படித்துறையை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெருமாள்குளம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள மூலங்குடியில் பெருமாள்குளம் உள்ளது. இந்த குளத்தினை குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் மூலங்குடி, வெங்காரம்பேரையூர், கமலாபுரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களைச்சேர்ந்த மக்கள் மற்றும் குளத்தின் அருகாமையில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சேதமடைந்த படித்துறை
இதனால் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளத்தின் கரையோரத்தில் மிகவும் அகலமான படித்துறை கட்டப்பட்டது. நாளடைவில் குளத்தின் படித்துறை சேதமடைந்தது. படிக்கட்டுகளில் விரிசல்கள் ஏற்பட்டும், முகப்பு சுவர்கள் உடைந்த நிலையிலும், குப்பைகள், உடைந்த பாட்டில்கள் சிதறியும், மிகவும் அசுத்தமான நிலையில் காணப்படுகிறது.
இரவு நேரங்கள் மட்டுமின்றி, பகல் நேரங்களிலும் மது அருந்துவதற்கு ஏதுவாக சமூக விரோதிகள் பயன்படுத்த மட்டுமே தற்போது படித்துறை பயன்பட்டு வருகிறது.
சீரமைத்து தர வேண்டும்
இதனால் கடுமையான கோடை காலங்களில் மட்டுமின்றி ஏனைய நாட்களிலும் அன்றாடம் பயன்படுத்தி வரும் குளத்தின் படித்துறையை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சேதம் அடைந்த படித்துறையை சீரமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.