கடலூர்
பருவ மழையை சமாளிக்க மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் கைகொடுக்குமா
|கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் கைகொடுக்குமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்
கடலூர்
இயற்கை பேரிடர்
இயற்கை பேரிடர்களால் ஆண்டுதோறும் பாதிக்கப்பட்டு வரும் மாவட்டமாக கடலூர் இருந்து வருகிறது. இதனால் தான் கடலூரை இயற்கை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் மாவட்டத்தில் கொள்ளிடம், வெள்ளாறு, கெடிலம், தென்பெண்ணையாறு என்று 4 பெரிய ஆறுகள் ஓடி வங்கக்கடலில் சங்கமிக்கிறது. பிற மாவட்டங்களில் வடிகாலாக கடலூர் உள்ளது. இது தவிர உப்பனாறும் உள்ளது.
இதனால் பிற மாவட்டங்களில் மழை பெய்தாலும் கடலூர் மாவட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக ஆறுகளின் கரைகளை பலப்படுத்தி, உயர்த்த வேண்டும். தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்க்க ஆங்காங்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இது தவிர நகருக்குள் மழைநீர் வடிகால்களை அமைத்தும், அந்த நீர் ஆற்றில் கலக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
வடிகால் வாய்க்கால்
அதன்படி பல்வேறு இடங்களில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்தது. ஆற்றின் கரைகளும் பலப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தென்பெண்ணையாற்றங்கரைகள் எவ்வித பராமரிப்பும் இன்றி உள்ளது. கரைகளே இல்லாமல் சில இடங்களில் உள்ளது. இந்த வழியாக மீண்டும் தண்ணீர் ஊருக்குள் புகுந்து விடும் நிலை உள்ளது. ஆனால் இது பற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடலூர் மாநகராட்சியில் ரூ.45 கோடிக்கு மேல் செலவு செய்து மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. அந்த வாய்க்கால்கள் தூர்ந்து குப்பைகள் நிறைந்து காணப்பட்டது. இதையடுத்து வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாய்க்கால்களும் தூர்வாரும் பணி நடந்தது. அந்த பணிகளும் பெரும்பாலானவை முடிந்து விட்டன. இருப்பினும் ஒரு சில வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. வில்வநகர், புதுப்பாளையம், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பிரதான வாய்க்கால்கள் தூர்ந்து கிடக்கிறது. ஏற்கனவே தூர்வாரிய இடங்களிலும் ஆகாய தாமரை முளைத்து விட்டன.
தூர்வார வேண்டும்
இதனால் வடகிழக்கு பருவமழை வந்தால் தண்ணீர் வடியாமல் அப்பகுதி வீடுகளுக்குள் தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையும் மாநகராட்சி நிர்வாகம் கவனித்து தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி என அனைத்து இடங்களில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் தூர்ந்து கிடக்கும் வாய்க்கால்களை கண்டறிந்து, அவற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் வடகிழக்கு பருவ மழையில் இருந்து தப்பிக்க முடியும்.
இது பற்றி சமீபத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி அதிகாரிகளும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீடுகளுக்குள் கழிவுநீர்
இது தொடர்பாக கடலூர் வில்வநகர் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த நிர்மலா கூறுகையில், எங்கள் பகுதியில் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. மழைக்காலங்களில் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் கலந்து வீட்டுக்குள் வந்து விடுகிறது. அப்போது நாங்களே வாய்க்கால்களை தூர்வாரி விடுவோம். எங்கள் தெரு முழுவதும் கழிவுநீராக நிற்கும். இதே நிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஆகவே எங்கள் பகுதியில் வடிகால் வாய்க்கால்களை மழைக்காலத்திற்குள் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதேபோல் பல இடங்களில் வடிகால் வாய்க்கால்களில் இணைப்பு இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக மழைநீர் வடியாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.