ராமநாதபுரம்
மன்னார் வளைகுடா தீவுகளில் கடத்தல் கும்பல் பதுங்கலா?
|மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடத்தல் கும்பல் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, கடலோர காவல்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
ராமேசுவரம்,
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடத்தல் கும்பல் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, கடலோர காவல்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
பதுக்கலா?
ராமேசுவரத்திற்கு மிக அருகில் இலங்கை கடல் பகுதி உள்ளதால் ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக அவ்வப்போது இலங்கைக்கு கடல் அட்டை, கஞ்சா, பீடி இலை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளும் கடத்தி வரப்படுகின்றன.
அதிலும் குறிப்பாக மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாகவே அதிகமாக கடத்தல் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள தீவுகளில் கடத்தல்காரர்கள் பதுங்கி இருப்பதாகவும், கடத்தல் பொருட்கள் பதுக்கப்பட்டு இருக்கலாம்? எனவும் தகவல் வெளியானது.
இதையடுத்து நேற்று இந்திய கடலோர காவல் படை, தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் வனத்துறையினரும் இணைந்து பாம்பன் அருகே உள்ள சிங்கிலி தீவு, குருசடைத்தீவு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
இந்த தேடுதல் வேட்டையின் போது தீவுகளில் உள்ள சந்தேப்படும்படியான பல்வேறு இடங்களில் பொருட்கள் ஏதேனும் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா? என குழி தோண்டியும் தேடி பார்த்தனர். அடர்ந்த செடி மற்றும் மரங்களுக்கு இடையே கடத்தல்காரர்கள் யாரேனும் பதுங்கி உள்ளார்களா? எனவும் தேடினர்.
ேதடுதல் வேட்டை
தீவுகளில் இருந்தப்படியே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சந்தேகப்படும்படியான படகுகள் ஏதேனும் வருகிறதா என பைனாகுலர் மூலமும் கண்காணித்தனர். இதே போல் கீழக்கரை அருகே உள்ள தீவுகளிலும் சோதனை நடைபெற்றது.
இதுபற்றி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஆட்கள் நடமாட்டம் இல்லாத 21 தீவுகளிலும் சோதனை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக 4 தீவுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் எந்த ஒரு பொருட்களும் கைப்பற்றப்படவில்லை. மீதமுள்ள 17 தீவுகளிலும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறும் என்று கூறினார்.