கைதிகளிடம் பணம் கேட்டு சிறை அதிகாரிகள் மிரட்டலா? - டி.ஐ.ஜி. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
|கைதிகளிடம் பணம் கேட்டு சிறை அதிகாரிகள் மிரட்டுகின்றனரா என்பது குறித்து விசாரணை செய்ய டி.ஐ.ஜி.க்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதியாக இருப்பவர் ராதாகிருஷ்ணன். இவரிடம், சிறை உதவி ஜெயிலர் சுந்தர்ராஜன், வார்டன்கள் சுரேஷ், சக்திவேல், பிரேம் ஆனந்த் ஆகியோர் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், ராதாகிருஷ்ணனின் மனைவி மரகதம் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "இந்த சிறை அதிகாரிகளின் மிரட்டல் காரணமாக ஏற்கனவே தினேஷ் என்ற கைதி தற்கொலைக்கு முயன்றதாகவும், பணம் கேட்டு மிரட்டிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோர், "மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு உண்மையானவையா? என்று தெரியவேண்டும். எனவே, வேலூர் சிறைத்துறை ஐ.ஜி., மனுதாரர் புகார் குறித்து விசாரித்து செப்டம்பர் 4-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.